மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

நவீன இந்திய சமூகத்தில் ஊழல் யாரையும் தொந்தரவு செய்யாத ஒரு விசயமாய் மாறிக்கொண்டிருக்கிறது. சாதாரண குடிமகனுக்கு தனது காரியம் ஆகவேண்டும் எனில் அதற்கு கையூட்டு கொடுப்பது இயல்பான சங்கதியாய் தோன்றுகிறது. யாருதான் சார் தப்பு செய்யல என்று விளக்கம்வேறு கொடுக்க பழக்கமாகி இருக்கிறது. சிறிய அளவில் நமது நேரடி வாழ்க்கையில் லஞ்சம் பெறுபவர்களை எதிர்க்க முடிகிற நம்மால் இவர்களை ஒன்றும் செய்ய முடிய வில்லையே என்று கோபம் வருகிறது.

சிதம்பரத்தில் நான் அரசு கலைக் கல்லூரியில் படித்த காலத்தில் (1992 - 1995) எனது நண்பனின் தங்கைக்கு சாதி சான்றிதழ் வாங்கிய படலம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பொதுவாக இந்த சான்றிதழ்கள் வாங்குவது அவசரம் என்பதாலும், சலுகை சார்ந்த விஷயம் என்று நினைக்கப்படுவதாலும், மிகவும் மூச்சு வாங்கும் பழக்கம் என்பதாலும் போகின்ற இடத்தில் கேட்பதை கொடுப்பது அவசியமாகிறது.

நானும் எனது நண்பனும் லஞ்சம் கொடுக்காமல் வாங்குவது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவெடுத்தோம்.

வட்டாச்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் படிவம் ஒன்று வாங்கி அதை மடிப்பு கலையாமல் ஒரு அட்டை பைலில் (கோப்பு) வைத்து முதலில் கிராம முதன்மை அதிகாரியை (வி.ஏ.ஓ) சந்தித்தோம். அவர் மிகவும் சிரித்த முகத்துடன் வரவேற்று அமரச்செய்தார். நாங்கள் நீட்டிய படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யத் துவங்கினார்.

"தம்பி இதுல எனக்குதான் வேலை அதிகம், வருவாய் அதிகாரிக்கும் (ஆர்.ஐ), வட்டாச்சியருக்கும் (தாசில்தார்) வெரும், கையெழுத்து போடுற வேலைத்தான்" அவரின் அனுபவ அறிவை பயன்படுத்தி எங்களிடம் தேவையான தகவலை கேட்டு, அந்த விபரங்களை பயன்படுத்தி மிகவும் துரிதமாக கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து எங்கள் கையில் கொடுத்தார். கொடுக்கும் போது அவர் சிரித்த சிரிப்பு மிகவும் முக்கியமான கட்டத்தை அடைந்ததை உங்களுக்கு உணர்த்தும்.

எங்களுக்கும் உணர்த்தியது. நாங்கள் ஏற்கனவே எடுத்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவின் அடிப்படையில் பதிலுக்கு அதே தன்மையில் எங்கள் ஈறுகளை காட்டி ஒரு சிரிப்பை தவழவிட்டோம். இப்போது அவர் முகத்தில் சிரிப்பு இல்லை.

நான் எழுந்துக்கொண்டே சொன்னேன், "ரொம்ப நன்றி ஐய்யா"

இப்போது அவர் முகத்தில் ஒருவித கடுமை பரவியது. "அதுசரி தம்பி, ஏதாவது கொடுத்துட்டு போங்க என்றார்"

நாங்கள் எங்கள் திட்டத்தின் அடுத்த கட்டத்தை செயல்படுத்த துவங்கினோம். எனது நண்பன் தன்கையில் கொண்டு வந்த மஞ்சள்நிற துணிப்பையை திறந்து உள்ளேயிருந்து இதற்கெனவே தேர்ந்தெடுத்து வாங்கிய இரண்டு மிகச்சிறிய அளவிலான வாழைப்பழத்தை எடுத்து அவர் மேசைமீது வைத்தான்.

அவருக்கு இது எதிர்பாராத அல்லது முதல் அனுபவமாக இருந்திருக்க வேண்டும். என்ன சொல்வது என்று கொஞ்சம் குழம்பிப்போனார்.

"தம்பி என்னா விளையாடுறீங்களா! 20 ரூவா கொடுங்க"

"சார் எங்களுக்கு லஞ்சம், கொடுத்து பழக்கம் இல்லிங்க"

"இந்த சட்டத்த முதல்ல பேசியிருந்தா தெரியும்"

"முதல்ல பேசக்கூடாதுன்னு எங்களுக்கு தெரியும் சார்"

" சரி ஆர்.ஐ கிட்ட எப்படி வாங்கரீங்கன்னு பாக்குறேன். கௌம்புங்க"

நாங்கள் மீண்டும் ஒரு ஈறு சிரிப்பை உதிர்த்துவிட்டு புறப்பட்டோம்.

"தம்பி இந்த பழத்தை எடுத்துகிட்டு போங்க, சைஸ பார்த்தால் பத்திக்குது"

நன்றி ஐயா என்று கூறிவிட்டு அந்த பழங்களை எடுத்து மீண்டும் பையில் போட்டுக்கொண்டு புறப்பட்டோம்.

அடுத்து வருவாய் அதிகாரி வீடு. அங்கு செல்வதற்கு முன் சிவராஜ்குமார் என்ற ஒரு வக்கில் குமாஸ்தாவையும் அழைத்துச்சென்றோம். அவரிடம் எங்கள் வரலாற்று சபதத்தை சொல்லவில்லை. (இவர் சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினராக இருந்தவர். ஜனதா தளத்தின் மாவட்ட தலைவராக இருந்தவர், சாதாரண மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை இப்போது செய்துக்கொண்டு இருக்கிறார். ஒரு ரேசன் கடை அரிசி கடத்தலின் போது நாங்கள் இணைந்து அதை தடுத்து சாகசம் புரிந்ததில் நெருக்கமான பழக்கம் இருந்தது.)

நாங்கள் சென்ற போது ஆர்.ஐ அய்யா மதிய உணவை முடித்துவிட்டு, வாயில் வெற்றிலையை குதப்பிக்கொண்டு மதிய தூக்கத்திற்கான முஸ்தீபில் இருந்தார். கேட்டருகே நின்று, அய்யா வணக்கம் என்று நாங்கள் மூவரும் இருகரம் குவித்து அவரை சேவித்தோம்.

அவர் ஏதோ ஒரு பாடலை ராகமிழுத்துக்கொண்டே எங்கள் வணக்கத்திற்கு தலையசைப்பை பதிலாக கொடுத்தார். எங்களுடன் வந்த சிவராஜ்குமாரை பார்த்து சினேகமாய் புன்னகைத்தார். நாங்கள் எங்கள் தஸ்த்தாவேஜ்களை கொடுத்தோம். அவைகளை சரிபார்த்து அவரது ரப்பர் ஸ்டாம்ப்பை என் கையில் கொடுத்து, இரு இடத்தில் இங்க் பேடில் தொட்டு முத்திரயிடச் சொன்னார். அவ்வண்ணமே நானும் செய்தேன். அடுத்து தனது பேனாவை திறந்து கையெப்பமிட்டு பேப்பரை எங்கள் பக்கம் திருப்பினார். நாங்கள் பெற்றுக்கொண்டோம்.

அடுத்து அவர் தனது மேஜை டிராயரை திறந்து விலையேதும் போடப்படாத அரசு முத்திரைக் கொண்ட இரண்டு ஸ்டாம்புகளை எடுத்தார்.

"தம்பி இது அரசாங்கம் நலதிட்ட நன்கொடை ஸ்டாம்பு ஒரு ஐம்பது ரூபாய் கொடுங்க என்றார்"

"சார் எங்களுக்கு இது வேண்டாம்"

"என்னப்பா இப்படி சொல்றீங்க, நான் என்ன எனக்கா கேட்கிறேன், அரசாங்கத்திற்கு தானே"

"இல்ல சார் எங்களுக்கு வேண்டாம்"

சில வினாடிகள் யோசித்தார். " சரி ஏதாவது கொடுங்க"

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமார என்பதுபோல நான் எனது சட்டை பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்தேன். அவர் மேஜையில் சிறு ஓசை எழுப்பியபடி வைத்தேன். அவருக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. ஆத்திரத்துடன் கேட்டார்,

"என்னாயா இது"

"சார், நீங்கதானே ஏதாவது கேட்டீங்க. டீ சப்பிடுங்க என்றேன்"

அவருக்கு முகமெல்லாம் சிவந்துவிட்டது.

"இத மொதல்ல எடுய்யா" என்றார்.

துரிதகதியில் இயங்கி உடனே நான் அந்த இரண்டு ரூபாய் நாணயத்தை எனது பையில் போட்டுக்கொண்டேன். எங்களுடன் வந்த பிரமுகர் ராஜ்குமாரிடம்

"என்ன சார் சாவுகிராக்கிய கொண்டாந்திருக்கிங்க" என்றதும், எங்களுக்கு தன்மானம் சூடாகியது.

"சார் மரியாதையா பேசுங்க, வாங்குறது லஞ்சம் இதுல கோபம் வேற வருதா?"

நிலமை சூடாக எங்களுடன் வந்த ராஜ்குமாரின் நிலைமை தர்மசங்கடமாகியது. அவர் ஆர்,ஐயின் காதில் ஏதோ சொல்ல அவர் தனிந்து "தம்பி மொதல்லே நீங்க யாருன்னு சொல்ல வேண்டாமா? தட்டி கிட்டி எழுதி கட்டிடாதிங்க. தயவு செய்து நீங்க போயிட்டு வாங்க என்றார்.

எங்களுடன் வந்த ராஜ்குமார் வெளியில் வந்து சொன்னார் "யப்பா என்ன கொன்னுட்டிங்க! நான் அந்தாள கோர்ட்டு விசயமா அடிக்கடி சந்திக்கனும். நல்லாயிருங்க" என்றார். நாங்கள் அவருக்கு ஒரு நன்றியை கொடுத்துவிட்டு நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ஏன்ற பாடலை விசிலில் இசைத்தப்படி இடம் பெயர்ந்தோம்.

இப்போது இதை நினைத்தால் ஒரு பக்கம் வருத்தமாய்தான் இருக்கிறது. 20 ரூபாயும், 50 ரூபாயும் கேட்ட கடைநிலை ஊழியர்களிடம் வீரத்தை காட்டியது தவறோ என்று சின்ன சங்கடம் உறுத்திக்கொண்டே இருக்கிறது. மெகா கொள்ளையர்களை உரசிக்கூட பார்க்காத, லஞ்சம் வாங்கும் சாதாரண ஊழியர்களை கொலைசெய்வது போல காட்சியமைத்து, அதில் மக்களின் அரிப்புக்கு ஜாலிம்லோஷன் மருந்து கொடுத்து கோபத்திற்கு வடிகால் அமைக்கிற இயக்குனர் ஷங்கர் பாணி திரைப்படங்கள் நினைவுக்கு வருகிறது. 60 லட்சம் முந்திரா ஊழலுக்காக இந்திரா காந்தி பட்டப்பாடு அனைவரும் அறிந்ததுதான்.

60 கோடி போர்ஃபஸ் ஊழலுக்காக ராஜிவ் காந்தியை தூக்கியெரிந்த நமது நாட்டு மக்கள் முன்பு, இஸ்ரேலுடன் ஆயுதம் வாங்கியதில் அதைவிட 60 மடங்கு அதாவது 600 கோடி கொள்ளையடித்த காங்கிரஸ் காரர்களால் வாக்கு சேகரிக்க வரமுடிகிறது. மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முடிகிறது.

இதை ஏப்பம் விடுவதைப்போல் ஸ்பெக்ட்ரம் என்ற தொலை தொடர்பு அலை வரிசை ஊழலில் ஒரு லட்சம் கோடி ஊழல் செய்த தி.மு.க மந்திரி ராஜாவால் சிரித்த முகத்துடன் ஓட்டுக் கேட்க முடிகிறது, மீண்டும் மந்திரியாக முடிகிறது.

தெகல்கா இணையதளத்தின் கேமராமுன் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய பா.ஜ.கவினர் அடுத்த பிரதமர் என்று மார்தட்ட முடிகிறது. இயக்குனர் ஷங்கர் கையில் ஜாலிம்லோஷன் என்றால் இவர்கள் கையில் இலவசம் என்கிற ரிங்சோலின் இருக்கிறது.

மக்களுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமைகளான நிலம், வீட்டுமனைப் பட்டா, ரேஷன் பொருட்கள் போன்றவைகளை இலவசம் என்று மயக்கி, ஊழல்களை மூடிமறைக்கும் சுயநலவாதிகளை இளைய சமுதாயம் என்ன செய்ய போகிறது? யாருதான் சார் லஞ்சம் வாங்கவில்லை என்று வெற்று வார்த்தைகளை முனகியப்படி முடங்கிக்கிடக்க போகிறதா? தொலைகாட்சிகளில் வரும் மாயா காட்சிகளை பார்த்தபடி ரசித்து இடம் பெயர போகிறதா? இன்டர்நெட் உலகத்தில் இன்பம் துய்க்க போகிறதா? இவையெல்லாம் இளைஞர்கள் முன் உள்ள கேள்விகள் மட்டுமல்ல இந்த தேசத்தின் மீதும் எழுப்பப்படும் கேள்விகள். .

------ எஸ்.ஜி.ரமேஷ்பாபு

6 comments

 1. Anonymous Says:
 2. sari

   
 3. Winmugil Says:
 4. ///////மெகா கொள்ளையர்களை உரசிக்கூட பார்க்காத, லஞ்சம் வாங்கும் சாதாரண ஊழியர்களை கொலைசெய்வது போல காட்சியமைத்து, அதில் மக்களின் அரிப்புக்கு ஜாலிம்லோஷன் மருந்து கொடுத்து கோபத்திற்கு வடிகால் அமைக்கிற இயக்குனர் ஷங்கர் பாணி திரைப்படங்கள் நினைவுக்கு வருகிறது. 60 லட்சம் முந்திரா ஊழலுக்காக இந்திரா காந்தி பட்டப்பாடு அனைவரும் அறிந்ததுதான்.

  60 கோடி போர்ஃபஸ் ஊழலுக்காக ராஜிவ் காந்தியை தூக்கியெரிந்த நமது நாட்டு மக்கள் முன்பு, இஸ்ரேலுடன் ஆயுதம் வாங்கியதில் அதைவிட 60 மடங்கு அதாவது 600 கோடி கொள்ளையடித்த காங்கிரஸ் காரர்களால் வாக்கு சேகரிக்க வரமுடிகிறது. மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முடிகிறது.

  இதை ஏப்பம் விடுவதைப்போல் ஸ்பெக்ட்ரம் என்ற தொலை தொடர்பு அலை வரிசை ஊழலில் ஒரு லட்சம் கோடி ஊழல் செய்த தி.மு.க மந்திரி ராஜாவால் சிரித்த முகத்துடன் ஓட்டுக் கேட்க முடிகிறது, மீண்டும் மந்திரியாக முடிகிறது.

  தெகல்கா இணையதளத்தின் கேமராமுன் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய பா.ஜ.கவினர் அடுத்த பிரதமர் என்று மார்தட்ட முடிகிறது. இயக்குனர் ஷங்கர் கையில் ஜாலிம்லோஷன் என்றால் இவர்கள் கையில் இலவசம் என்கிற ரிங்சோலின் இருக்கிறது.///////

  நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ளது உண்மை. உங்களது குமுறலும் கோபமும் மிகவும் சரியானதுதான் நண்பரே.

  //////மக்களுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமைகளான நிலம், வீட்டுமனைப் பட்டா, ரேஷன் பொருட்கள் போன்றவைகளை இலவசம் என்று மயக்கி, ஊழல்களை மூடிமறைக்கும் சுயநலவாதிகளை இளைய சமுதாயம் என்ன செய்ய போகிறது? யாருதான் சார் லஞ்சம் வாங்கவில்லை என்று வெற்று வார்த்தைகளை முனகியப்படி முடங்கிக்கிடக்க போகிறதா? தொலைகாட்சிகளில் வரும் மாயா காட்சிகளை பார்த்தபடி ரசித்து இடம் பெயர போகிறதா? இன்டர்நெட் உலகத்தில் இன்பம் துய்க்க போகிறதா? இவையெல்லாம் இளைஞர்கள் முன் உள்ள கேள்விகள் மட்டுமல்ல இந்த தேசத்தின் மீதும் எழுப்பப்படும் கேள்விகள். .

  ------ எஸ்.ஜி.ரமேஷ்பாபு//////

  உங்களது கேள்விகள் கூட நியாயமானதே. இந்தக் கேள்விகள் ஒரு சராசரி இளைஞன் என்கிற வகையில் எனக்குள்ளும் நீண்டநாட்களாக உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது ஐயா. இதற்கு முடிவுதான் என்ன? இதற்கு மாற்று என்று நாம் எதையாவது முன்வைக்க முடியுமா. அப்படியே முன்வைத்தாலும் அது பிராக்டிக்கலாக சாத்தியப்பட வாய்ப்பிருக்கிறதா?

  தயவு கூர்ந்து விளக்குங்கள். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  அன்புடன்,
  வின்முகில்.
  winmugil@gmail.com

   
 5. புகழினி, வின்முகில் இருவருக்கும் நன்றி,
  வின்முகில் தங்களது கேள்வி மிகச்சரியானது. விடைகளை சேர்ந்து தேடுவோம். விடைகள் இல்லாத கேள்விகள் இன்னும் உருவாகவில்லை. மாற்றத்திற்காக பல இயக்கங்கள் போராடிக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுடன் கைகோர்போம்.
  நட்புடன் ரமேஷ்பாபு

   
 6. தங்களது பதிலுக்கு நன்றி ஐயா!

  மாற்றத்திற்கான போராட்டம் என்பது அவசியமானதுதான். எந்த வகையிலான மாற்றம், நாம் குறிப்பிடப் போகும் இலக்கு என்பது எத்தகையது என்பதையும் நாம் விவாதிக்க வேண்டும். இதுபற்றி நீங்கள் முன்னமேயே ஏதாவது பதிவுகள் எழுதியிருந்தால் எனக்கு அறிமுகப்படுத்துங்கள், நண்பரே.

  அதேபோல் உங்களது இந்த அருமையான கட்டுரையின் மீது எனக்கொரு விமர்சனமும் இருக்கிறது. அதனை நான் தெரியப்படுத்தலாமா? என்பதை நீங்கள் சொன்னால் நான் எனது விமர்சனத்தை இங்கு பதிவேன்.

  அன்புடன்,
  வின்முகில்

   
 7. வின்முகில்........
  என்னுடைய பிளாக்கில் உள்ள பல கட்டுரைகளில் தாங்கள் விரும்பும் தகவல்கள் உள்ளது. படிக்கவும். தாங்கள் என்னுடைய கட்டுரை குறித்த விமர்சனாத்தை எழுதினால் அது எனக்கு மிகவும் உதவியாய் இருக்கும். இந்த உலகில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை. நன்றி. பதிலுக்கு காத்திருக்கிறேன்

   
 8. வின்முகில்........
  என்னுடைய பிளாக்கில் உள்ள பல கட்டுரைகளில் தாங்கள் விரும்பும் தகவல்கள் உள்ளது. படிக்கவும். தாங்கள் என்னுடைய கட்டுரை குறித்த விமர்சனாத்தை எழுதினால் அது எனக்கு மிகவும் உதவியாய் இருக்கும். இந்த உலகில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை. நன்றி. பதிலுக்கு காத்திருக்கிறேன்

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark