மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

வெயிலில்...மழையில்...குளிரில்...

Posted by நட்புடன் ரமேஷ் Friday, December 26, 2008 ,

தமிழக இளைஞர்களின் தீராத பிரச்சனையாக தொடர்கிறது இந்த வார்த்தை. வேலை கொடு அல்லது நிவாரணம் கொடு என்ற கோரிக்கையில் துவங்கி, இன்றைக்கு சமூக பாதுகாப்புடன் வேலை கொடு என்ற முழக்கத்துடன் கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் நீள அகலத்தை சைக்கிள்களால் கடந்து, இளைஞர்களை தட்டியெழுப்பிய ஒரு இயக்கம் உண்டென்றால் அது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மட்டுமே.

2008ல் சேதுகால்வாயை வலியுறுத்தி தென் மாவட்டங்களிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சைக்கிள் பிரச்சாரம் நடத்திய வாலிபர்சங்கம், தற்போது குமரி, கோவை, இராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி தமிழகம் முழுவதும் வெண்கொடி ஏந்தி முழக்கமிட்டு முன்னேறிச்சென்று கொண்டிருக்கிறது.

கோவையிலிருந்து மாநிலத்தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையிலும், குமரியிலிருந்து மாநிலச்செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையிலும், ராமேஸ்வரத்திலிருந்து மாநில துணைச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையிலும் சென்று கொண்டிருக்கும் இந்த வெண்கொடிப்படை, 28ம் தேதி சென்னையில் சங்கமிக்கின்றன. டிச.13ஆம் தேதி துவங்கி டிச.28ஆம் தேதி வரை 15 நாட்கள் சம்பளம் கிடைக்காது, வீட்டுக்கு காசுதர முடியாது என்று தெரிந்தும்கூட சென்னை வரை நாங்கள் வந்தே தீருவோம் என்று தாங்களாகவே முன்வந்த தோழர்களும் உண்டு; தனது சித்தப்பா இறந்துபோனபோதிலும் கூட, பயணத்திலிருந்து விலக விரும்பவில்லை என்று கூறி தொடரும் தோழனும் உண்டு; உடல்நிலை சரியில்லை என்ற போதிலும், அதை மறைத்து, நான் சைக்கிள் ஓட்டியே தீருவேன் தோழர் என்று விடாப்பிடியாக சைக்கிள் ஓட்டும் இளம் பெண்களும் உண்டு; கடும் வெயிலிலும், மாலை ஆனதும் செவிப்பறையைக் கிழிக்கும் குளிர்காற்றிலும் சைக்கிள் மிதித்தாலும், வரவேற்பு கொடுக்குமிடத்தில் சற்று கூட ஓய்வெடுக்காமல் பம்பரமாய் சுழன்று பொதுமக்களிடம் பிரசுரம் விற்பது, உண்டியலில் நிதி திரட்டுவது என தொடர்கிறது இந்த இளைஞர் படையின் பெரும்பயணம்.

குமரியில் துவங்கி திருச்சியை கடந்துவிட்டோம் எனக்குறிப்பிட்ட மாநிலச்செயலாளர் எஸ்.கண்ணன், இதுவரை சுமார் 600 கி.மீ தூர பயணத்தில் 85க்கும் அதிகமான இடங்களில் வாலிபர்சங்கத்தினர் மட்டுமின்றி, கமல்ஹாசன், அஜீத், விஜய் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்கள், ஆதித்தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஐயப்பபக்தர்கள் என பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பளித்தனர் என்றார். குறிப்பாக பெண்கள் எங்கள் பயணத்தை பேராதரவுடன் வாழ்த்தி வரவேற்றனர். வேலை வேண்டும், அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்று பிரச்சாரக்கூட்டத்தில் பல்வேறு ஆதாரங்களுடன் எங்கள் தோழர்கள் பேசியதை தலையசைத்து ஆமோதித்த ஏராளமான தாய்மார்களை காணமுடிந்தது. அது அவர்களது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியது என்று குறிப்பிட்ட அவர், பல இடங்களில் சாலையில் சைக்கிள் மிதித்து கொண்டிருந்த எங்களை வழியில் கார்களில் செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிறுத்தி பழங்கள், பிஸ்கட்டுகள், குடிநீர் என தாங்களாகவே முன்வந்து, எந்த அறிமுகமும் இன்றி வாங்கிக்கொடுத்து வாழ்த்தினார்கள் என்று பெருமிதம் பொங்க கூறினார்.

கோவையில் துவங்கி 500 கி.மீ தூரம் பயணம் செய்து வேலூர் மாவட்டம் ஆரணியை அடைந்துவிட்ட எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையிலான சைக்கிள் பயணக்குழுவிற்கு சுமார் 90 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப்பயணத்தில் பங்கேற்றுள்ள 32 இளைஞர்களும், தமிழகச் சாலைகளில் மிக உயரமான இடத்தில் இருக்கும் சாலையாக கருதப்படும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர்மேடு பகுதியில் சைக்கிள் மிதிக்கும்போது மிகவும் சிரமப்பட்டார்கள் எனக்குறிப்பிட்ட அவர், நாமக்கல் பகுதியிலும் மலையை ஒட்டி அமைந்துள்ள சாலைகள் சைக்கிள் பயணத்திற்கு சவாலாகவே இருந்தது என்றாலும், விவசாயத்தொழிலாளர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு நின்று அளித்த வரவேற்பு எங்கள் களைப்பை காணாமல் போகச்செய்தது என்றார்.

ராமேஸ்வரத்தில் துவங்கி தமிழக கடலோர மாவட்டங்கள் வழியாகவே சுமார் 420 கி.மீ பயணம் மேற்கொண்டு கடலூரை நெருங்கியுள்ள ஆர்.வேல்முருகன் தலைமையிலான குழு முதல் ஐந்துநாட்கள் முழுக்க முழுக்க கனமழையில் நனைந்துகொண்டே மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டது என்பது நினைவுகூரத்தக்கது. மழையில் நனைந்தபோதிலும் உற்சாகம் குன்றாமல் வந்த இக்குழுவினர் வெள்ளச்சேதம் ஏற்பட்ட காவேரி டெல்டா மாவட்டங்களின் உண்மையை நிலையை வழி நெடுக நேரில் காணும் வாய்ப்பை பெற்றனர். விவசாயத் தொழிலாளர்கள் படும்பாடு, இந்த மாவட்டங்களில் வெள்ளத்தாலும், மழையின்மையாலும் மாறி மாறி துயரத்தை அனுபவிக்கும் விவசாயி வீட்டு பிள்ளைகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை கண்கூடாகக் காட்டியது என்று வேல்முருகன் குறிப்பிட்டார். திருவாரூர், நாகை மாவட்டங்களில் கிராமம் கிராமமாக திரண்டு நின்று மக்கள் வரவேற்பளித்தனர் எனக்குறிப்பிட்ட அவர், நூற்றுக்கும்மேற்பட்ட மையங்களில் வெகுசிறப்பான வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தன என்றும் கூறினார்.

மூன்று குழுக்களும் சென்னையில் சந்திக்கும்போது, தமிழகம் முழுவதையும் அலசிவிட்டு ஏராளமான அனுபவங்களைப்பெற்ற இளைஞர்களாக, தமிழகத்தின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டும் தலைவர்களாக மாறியிருப்பார்கள் என்றால் அது மிகையல்ல.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark