மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

சுக்கா, மிளகா சுதந்திரம்

Posted by நட்புடன் ரமேஷ் Saturday, September 13, 2008

“பூரண சுயேச்சைநம் தேசம்எய் திடுமாறு
போர்முர சடிக்க வேண்டும்.
புன்னெறிகொள் ஏகாதி பத்தியமோ டுறவுசெய்
போக்கைப் பழிக்க வேண்டும்,
சாரமில் லாதபுது அரசிய லெனும் அடிமைச்
சாசனம் உடைக்க வேண்டும்.
ஜனநாய கத்திற்கு முரணான சட்டங்கள்
தம்மைத் தகர்க்க வேண்டும்”
- ப.ஜீவானந்தம் (1937)

பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த நமது தேசம், ஆயிரமாயிரம் மக்கள் தியாகம் செய்து நடத்திய போராட்டத்தால் விடுதலை அடைந்தது. வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைக்காகப் போராடிய, மக்களைத் திரட்டிய தேசத் தலைவர்களுக்கும், தடியடிபட்டு உதிரம் சிந்திய, இந்த மண்ணில் விதையாய் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தேசபக்தர்களுக்கு எதிர்காலம் குறித்த கனவுகள் என்னவாக இருந்திருக்க முடியும். இந்த நாட்டின் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டெழ வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். நம்மவர்களை நம்மவர்களே ஆள வேண்டும். இவைகளுக்காகத்தான் அவர்கள் உயிர் கொடுத்தார்கள்.

பல நூறு ஆண்டுகள் காத்திருந்து மாமணியாய் கிடைத்த சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவானதாய் இருக்கிறதா என்பது கேள்விக்குறிய ஒன்று. சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளை கடந்த நமது நாட்டை மீண்டும் ஏகாதிபத்திய சக்திகளிடம் அடகு வைக்க நமது ஆட்சியாளர்கள் அலைகின்றனர். இன்று உலக நாடுகளை பொருளாதாரரீதியாக காலனி நாடுகளாக மாற்றத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நமது ஆட்சியாளர்கள் கைகோர்த்து நடைபயில துடிக்கின்றனர். அந்நிய பொருட்களை எதிர்த்த நமது பாரம்பரியத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு இரத்தினக் கம்பளம் விரிக்கின்றனர். உலகமயம் ஒன்றுதான் இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று மார்தட்டுகின்றனர். “லாபம் அது ஒன்றே தாரக மந்திரம்” உலகமயம் சொல்கின்ற இதே வார்த்தையைத்தான் நமது நாட்டின் தேசிய பெருமுதலாளிகளும் சொல்லுகின்றனர்.

லாபம் ஒன்றே நோக்கம் என்று அறிவிக்கப்பட்ட பின்பு அதில் நேர்மை, அன்பு, கருணை, மனிதநேயம், மக்கள் நலம் என்பதெல்லாம் நகைப்புக்குரியதாய் மாறிவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆளும் அரசுகளே ஊதுகுழலாய் மாறிய பின்பு, நமது ஊடகங்கள் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம் காட்டுவது தவிர்க்க முடியாது. “உலகமயம் தவிர்க்க முடியாதது.. இது ஒன்றே நாட்டை முன்னேற்றும்” என தினம் தினம் மண்டைக்குள் அறைந்து ஏற்றப்படும் செய்தி இதுதான்.

எப்படிப்பட்ட சந்தையில் நமது நாடு போட்டி போடுகிறது என்பது கூட மக்களுக்கு தெரியாது. நமது நாட்டில் உள்ள 27 அரசுத் துறை வங்கிகளின் மொத்த ஆரம்ப மூலதனம் 3 மில்லியன் (12,500 கோடி). ஆனால் அமெரிக்காவின் சிட்டி பேங்க் என்ற ஒரு வங்கியின் ஆரம்ப மூலதனம் 62 மில்லியன் (2,48,000 கோடி). ஹாங்காங் சாங்காய் வங்கியின் மூலதன மதிப்பு 54 மில்லியன் (2,16,000 கோடி). இதில் யாரை யார் விழுங்குவார்கள் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. சுதந்திரம் பெற்று இந்தியர்களை இந்தியர்களே ஆளும் காலத்தில்தான் கடந்த பத்தாண்டுகளில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் வாழ்க்கை நடத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். கிராமப்புறத்தில் எழுந்துவரும் வறுமை குறித்து நம்மை ஆள்பவர்கள் வாய்திறக்க மறுக்கின்றனர். சாதாரண உழைப்பாளி மக்களுக்கு சம்பந்தமுள்ள, அவர்களை, அவர்களின் வாழ்க்கையை வேரோடு சாய்க்கின்ற நிகழ்வுகளை யாரும் பேசத் தயாரில்லை.

தொன்னூரு சதமான மக்களுக்கு கொஞ்சமும் புரியாத பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1000 புள்ளியை தொட்ட அதே தினத்தில் நமது தேசத் தலைநகரில் கடும் குளிரில் ஒட்டுத்துணிகூட இல்லாமல், நடைபாதையில் இறந்துபோன ஐந்துபேரைப் பற்றி பெட்டிச் செய்தியை ஊடகங்கள் கடைசிப் பக்கத்தில் வெளியிடுகின்றன. மிட்டல் 3 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் என்று லட்சுமி மிட்டலின் புகழ்பாடும் அதேவேளையில் மன்மோகன் ஆட்சியில் மூன்றாண்டுகளில் 1100 நிறுவனங்களில் உள்ள பங்குதாரர்கள் ஒரு பைசாகூட வட்டி செலுத்தாமல் 40 ஆயிரம் கோடியை சுருட்டிக்கொண்டது யாருக்கும் தெரியாது.

ரிலையன்ஸ் அம்பானியின் புகழ் பாடுபவர்கள் நமது தொலைத்தொடர்பு துறையை 45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் போன் ஏமாற்றியதை சொல்ல மறுக்கின்றனர். நிதி அமைச்சர் சிவகங்கை சீமான் சிதம்பரம், கொள்ளையடித்த அம்பானியிடம் செல்லமாய் கோபித்து 500 கோடி கட்டினால் போதும் என கெஞ்சுகிறார்.

தொழில் துறையில் முன்னேறுவதாக பிரச்சாரம் செய்பவர்கள், அங்கு ஏற்படும் வேலையிழப்பை பார்க்க மறுக்கின்றனர். உதாரணமாக ஜம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு ஆலை 1991 - 2005 காலகட்டத்தில் தனது உற்பத்தியை ஐந்து மடங்கு உயர்த்தி உள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்திலிருந்து 44 ஆயிரமாக குறைந்துள்ளது. அதாவது சரிபாதி. சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு 1,25,000 கோடி ஒதுக்க தயாராகும் அரசு, அங்கு நிலங்களை இழந்த மக்களுக்கு எந்த வாழ்வாதாரத்தையும் காட்ட மறுக்கிறது. டாடாவுக்கு தானாய் முன்வந்து கடன் கொடுக்க தயாராய் உள்ள மத்திய அரசு இந்த அக்கரையில் கொஞ்சம் காட்டி நமது விவசாயிகள் கடன் சுமையை பகிர்ந்துக்கொண்டிருக்கும் என்று சொன்னால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருலட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார்கள்.

நமது வங்கிகள் சாதாரண மக்களுக்கு அவர்கள் பணத்திற்க்காக அளிக்கும் வட்டி விகிதம் 3.5 சதம் அல்லது 7சதம். ஆனால் பெரும் முதலாளிகளுக்கு 12 சதம். ஏழை மக்களுக்கு கொடுக்கும் விவசாய கடன்களுக்கு 9 சதம் வட்டி. கல்வி கடன்களுக்கு 14 சதம். ஆனால் பெரும் முதலாளிகளுக்கு வெறும் 7 சதம்தான். இந்தப் பின்னனியில்.. 75 சதம் மக்கள் விவசாயத்தை நம்பி வாழும் நமது நாட்டில் விவசாயம் சீரழிக்கப்படுகிறது.

1950ல் ஆண்டொன்றுக்கு 184 நாளாக இருந்த கிராமப்புற விவசாய கூலித்தொழிலாளர்களின் வேலை நாட்கள் 1964ல் 217ஆக உயர்ந்து பின் 180ஆக மாறி, 1990ல் 100 நாட்களாகவும், 2000ல் 80 நாளாகி தற்போது 60 70 என சுருங்கி உள்ளது. 70 முதல் 75 சதம் வரை விவசாயம் உள்ள நமது நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் இத்துறையின் வளர்ச்சி வெறும் 2 சதமே.

தமிழகத்தின் மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 1961ல் 43.51 சதமாக இருந்தது. இது 2005ல் 15.97 சதமாக குறைந்தது. இன்னும் தீவிரமாக இந்தபாதிப்பை அறிய வரும் விபரம் உதவும்; 1998ல் 94 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தி 2005ல் 44 லட்சம் டன்னாக குறைந்தது. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் போது தேசிய மொத்த உற்பத்தில் 14.9 சதம் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்டது. 10 வது ஐந்தாண்டு திட்டத்தில் இதுவே 5. சதமாக குறைந்தது. இந்த பாதிப்புகளினால் அதிகம் பாதிக்கப்படுவது தலித் மக்கள்தான். தமிழகத்தில் 19.18 சதம் தலித் மக்கள் 1985ல் 12 சதம் சாகுபடி செய்தனர், 1991ல் 7 சதம் மட்டுமே செய்தனர். தற்போது அது இன்னும் குறைந்துள்ளது.

இப்படிப்பட்ட புள்ளி விபரங்களை எழுதுவதும் படிப்பதும் சுவாரசியமற்ற நிகழ்வுகளாக மாறிக்கொண்டுள்ளது. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டில் இறந்துப்போகின்ற இருபத்து ஐந்து லட்சம் குழந்தைகள் பற்றியோ, பிறக்கின்ற குழைந்தைகளில் ஐம்பது சதமான குழந்தைகள் எடைகுறைவோடு பிறப்பது பற்றியோ, பிரசவத்தின் போதும், கருச்சிதைவாலும் ஒவ்வொரு ஆண்டும் மரணமடைகின்ற 1,35,000 தாய்மார்கள் பற்றியோ யாரும் கவலைப்படுவது கிடையாது.

இந்த தேசத்தின் இளைஞர்கள் வேலை கேட்டு அலைந்து திரிவதும், கிடைக்கின்ற வேலையும் அவர்களின் சுயமரியாதைக்கு ஏற்றவாறு இல்லாமலிருப்பதும் அவர்களை இந்த மண்ணிலிருந்து அந்நியப்பட வைக்கிறது. அதன் விளைவுதான் தேசம்குறித்த அவர்களின் பார்வை பற்றுக்கொண்டதாக இருக்க மறுக்கிறது. தேசத்தின் பாதை எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற தெளிவு இல்லாத காரணம்தான் இன்று சாதி மத இயக்கங்கள் வேரூன்ற அடிப்படையாக இருக்கிறது. திடீரென முளைக்கும் கட்சிகளும், தொடர்ந்து மக்களை ஏய்த்து வரும் முதலாளித்துவ கட்சிகளும் வாழ அடிப்படை இந்த புரிதலின்மையே.

தேச விடுதலைக்காக 23 வயதில் தூக்குக்கயிற்றை முத்தமிட்ட, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதனான பகத்சிங்கும், அவனது சகாக்களாக அவனுடன் இணைந்து உயிர்துறந்த சுகதேவும், ராஜகுருவும் ஏன் தியாகம் செய்தார்கள் என்று கற்றுணர வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாய் எழுந்து நிற்கிறது. இந்துஸ்தான் சோசலிச குடியரசு படையின் கமாண்டராக, ஆல்பிரட் பூங்காவில் வெள்ளைய ஏகாதிபத்திய தோட்டாக்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சந்திரசேகர ஆஸாத் குறித்தும், அவனது அரசியல் பணிகள் குறித்தும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 1781ம் ஆண்டு மருது சகோதரர்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சியில் வெளியிட்ட ஐம்புதீவு பிரகடனத்தை, அதன் கோபத்தை எப்படி உள்வாங்கி வெளிப்படுத்துவது.

சிவகங்கை ராணி நாச்சியாரின் பணிப் பெண்ணான குயிலி என்ற 16 வயது இளம் பெண் உடலில் நெய்யை ஊற்றிக்கொண்டு ஆங்கிலேய போர்த்தடவாள கிடங்கில் நெருப்போடு குதித்து மாண்டுபோனது இந்த தேசத்திற்காக இல்லையா? 1857ஆம் ஆண்டு உழுபடை நிலங்கள் உழுபவனுக்கே சொந்தம் என்ற முழக்கத்துடன் நடந்த பரந்துபட்ட சுதந்திரப்போரில் பகதூர்ஷா தலைமையில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் இந்த மண்ணின் நலனுக்கு மாண்டவர்கள்தானே. மக்கள் பிரச்சினையை சுதந்திரப் போராட்டத்தோடு இணைத்த சாந்தால் ஆதிவாசிமக்களின் போராட்டமும், கிலாபத் இயக்கமும், கப்பற்படை எழுச்சியும் மக்கள் வாழ்க்கையை முன்வைத்து நடந்தவைதானே. பாரதியும், வ.உ.சிதம்பரமும், சுப்பிரமணிய சிவாவும், கொடிகாத்த குமரனும், வாஞ்சிநாதனும், தங்கள் இளமையை தொலைத்தது எதற்காக? இந்த தேச நலனை முன்வைத்து அல்லவா?

இவர்களின் கோபத்தை சுமந்து போராட வேண்டிய இளைஞர்கள் இன்று எதைப்பற்றியும் கவலைப் படாமல், நடக்கும் கொடுமைகளை எதிர்த்துப் போராடாமல் நடிகர்கள் பின்னாலும், முதலாளித்துவ அமைப்புகள் பின்னாலும், சாதிய அமைப்புகள் பின்னாலும் அலைவதும் நமது நாட்டை ஆள்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரிய நடைமுறைகளாகும். இல்லையென்றால் விரக்தியின் மறுமுனைக்குச் சென்று எல்லோரும் அயோக்கியர்கள், ஓட்டுப் பொறுக்கிகள் என்று சித்தாந்தம் பேசி உடனே ஆயுதம் தூக்கச்சொல்லும், இந்த சமூகத்தின் யதார்த்தம் புரியாத வறரட்டுவாதிகளை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.

உலகமயம் என்னும் வலைப்பின்னலில் நமது தேசம் அடகு போக, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு காலனி நாடாகமாற அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், அந்த அபாயம் செய்திதாள்களில் சாதாரண செய்தியாக பார்க்கப்படுகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கண்டு கோபப்பட இளைஞர்களுக்கு தேச சுதந்திர போராட்டத்தின் பாரம்பரியத்தை கற்றுக்கொடுக்கும் வேலையை தெருத்தெருவாக துவக்கப்பட வேண்டியுள்ளது. இந்தப்பணி ஆற்றல் மிக்க இளைஞர் படையால் மட்டுமே முடியும். அந்த இளைஞர் படையில் நீங்களும் ஒருவராய் இருக்க சித்தமாய் உள்ளீர்களா? பணியை துவக்குங்கள். இளம் தலைமுறையை அவநம்பிக்கைமுனைக்கு தள்ளுவதை எதிர்த்து சுதந்திர தினத்தில் அர்த்தம் பொதிந்த கொடியை உயர்த்துங்கள்.

எஸ்.ஜி.ரமேஷ்பாபு


0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark