மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


நமது தேசத்தில் கல்வி நிலையத்திற்கும், சமூகத்திற்கும் இடையே உள்ள சந்திப்புக் களம் ஆண்டின் இறுதியில் நடைபெறும் தேர்வும், அதன் முடிவுகளும் தான்... அதன் இடையில் நடைபெறும் எந்த கல்விநிலைய நிகழ்வுகளும் பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதில்லை. அது மிகப் பெரிய துயர சம்பவமாய் இல்லாத வரை.
ஆனால், நமது குழந்தைகளின் வகுப்பறைகள் ஒரு வித மயான அமைதியுடன் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த மயான அமைதிக்கு ஒழுக்கம் சார்ந்து.. என்ற அடைமொழி வேறு. ஒரு வாயும் நிறைய காதுகளும் நிறைந்த நமது தேசத்தின் வகுப்பறைக்குள் உருவாகும் இளம் தலைமுறை நவீன அடிமைகளாய் உருமாறிக்கொண்டிருக்கின்றனர்.
ஆங்கில மோகமும், அரசின் அலட்சியமான கல்விக் கொள்கையும் பெற்றோர்களை கிடைக்கும் இடங்களில் பிள்ளைகளைச் சேர்க்கத் தூண்டுகிறது. ஆனால், அந்த கல்வி நிலையங்கள் எத்தகைய லாப வெறியோடு பெற்றோர்களை அணுகுகின்றன..
இன்று தமிழகத்தில் ஒருவர் மிக விரைவில் கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் ஒரே வியாபாரம் கல்வி. ஏனெனில் அவருக்குத் தெரியும்.. தந்தை ரிக்ஷா ஓட்டினாலும் மகன் ஆங்கிலப் பள்ளியில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட பயிற்றுவிக்கப்பட்டுள்ளார். பிச்சை புகினும் கற்கை நன்று. இதன் விளைவு என்ன? லாப வெறியர்கள் கல்வி நிறுவனங்கள் பலிபீடத்தில் காவு வாங்கப்பட்ட அந்த பிஞ்சுக்களின் சோக கதை இது... என்று தணியும்....
உனது இறந்த உதடுகளுக்காக, பேச வந்திருக்கிறேன் நான், எனக்கு போராட்டத்தையும், எரிமலைகளையும் கொடு, எனது குரலின் ஊடே,எனது இரத்தத்தின் ஊடே பேசு. பாப்லோ நெருடா நெருடாவின் கோட்டோவியம் புகைப்படமாய் மாற..மாற எழுத்துக்கள் தோன்றி மறைகிறது
எரிந்து சிதைந்த குழந்தைகளின் ஒன்றை பொறுக்கி எடுத்து தன் குழந்தை என அடக்கம் செய்ததை கண்ணீரினூடே அந்தத் தாய் சொல்கிறாள்.
சம்பவத்தை சொல்ல-வந்த சிறுமி வேண்டாம் அங்கிள் நான் சொல்லமாட்டேன் என்று வெடித்து அழுது தன் முகத்தை கைகளால் மூடிக்கொள்கிறாள்.
தன் கண் எதிரே நெருப்புக் காயங்களோடு தவித்து கதறி மெல்ல மெல்ல உயிர் அடங்கிப் போன குழந்-தையின் தந்தை சம்பவத்தை சொல்லும் போது எழும் உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை...
சின்ன அறையில் தனது மகளுக்கு வெக்கை தாங்காது என ஒரு மின் விசிறி மாட்டி உள்ளனர். அது இரண்டு வருடமாய் சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த மகள் புகைப்படமாய் சிரித்து கொண்டிருக்கிறாள்.
ஒரு வயதான மூதாட்டி மண்டியிட்டு கைகளை ஊன்றி இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மத்தியில் தன் பேத்தியை கண்ணீர்விழுதுகளோடு தேடிக் கொண்டிருக்கிறாள்.
உடன் எரியும் மெழுகுவர்த்தி-களின் வெப்பம் தாளாமல் அந்த ஒற்றை மெழுகுவர்த்தி எரிந்துக் கொண்டே சரிந்து விழுகிறது.
இறந்த குழந்தைக்கு படைக்கும் பொருட்களில் ஃபைவ்ஸ்டார் சாக்லெட் வந்து போகிறது.
கூட்டம் கூட்டமாய் மக்கள் அஞ்சலி செலுத்தச் சென்று கொண்டிருக்கின்றனர். ஆடுகிற மூங்கில் தொட்டியில் புத்தகங்களுக்கு மேலே புன்னகையுடன் அவன் படம்.
கூட்டமாய் எரிந்து கிடக்கும் குழந்தைகள் மீது தண்ணீர் பட்டதும் ஆவி கிளம்பும் காட்சி இதயத்தை அதிர வைக்கிறது.
எரிந்து விரைத்துக் கிடக்கும் மழலையை மடியில் கிடத்தி அழ தெம்பில்லாமல் தந்தை பிரமைபிடித்து திரும்பி திரும்பி பார்ப்பது... மனது வலிக்கிறது.
இதயம் துடிக்க நாம் காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது எரிந்த கூரையின் சிதைந்த இடிபாடுகளுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கும் கட்டையின் மீது அமர்ந்-திருக்கும் அந்த கழுகு, கல்வி கேட்ட குழந்தைகளை கரிக் கட்டைகளாக்கி விட்டு எரிந்த கூரையின் மீது அமர்ந்திருக்கும் அரசாங்கமாய் தோற்றமளிக்கிறது.
என்று தணியும்... குமார் 2004 ல் கும்பகோணத்தில், ஒரு தனியார் பள்ளியில் நடந்த தீ விபத்தைப் பற்றி இயக்கிய ஆவணப்படம். அக்குழந்தைகளுக்கு அஞ்சலி செய்வதற்காக எடுத்த படம் போலத் தான் துவங்குகிறது. ஆனால் நேரம் செல்லச் செல்ல மொத்தமாய் மாறுகிறது.குழந்தைகளை கல்வி வியாபாரம் என்ற பலிபீடத்தில் காவுவாங்கப்பட்டதற்கு இந்த சமூகம், போதுமான கோபப்படவில்லை என்பதை சொல்கிறது. தமிழக அரசியல் சூழல், முதலாளித்துவ கட்சிகளால் தனிநபர் துதிபாடலும், உணர்வு மயமான சிந்தனைகளையும் விதைத்து சமூகத்தின் பொதுப் புத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு நமது தமிழக ஊடகங்கள் வெகுவாய் உதவுகின்றன. எது குறித்து சமூகம் கோபப்படவேண்டும் அந்தக் காரணங்களை பின்னுக்குத் தள்ளுவது எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது. இவைகளை இப்படம் பேசுகிறது.
கும்பகோணம் பள்ளியில் அத்துணை குழந்தைகள் இறந்ததற்கு காரணம் தீ மட்டும்தனா?ஒரு கட்டடத்தில் மூன்று பெயரில் (சரஸ்வதி தொடக்கப்பள்ளி, சரஸ்வதி ஆங்கிலப்பள்ளி, கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப்பள்ளி) கல்வி நிலையத்தை நடத்த அனுமதித்த அரசு அதிகாரி-கள் குற்றவாளிகள் இல்லையா? மாணவர்களை ஆய்வு நடத்தும் தினம் பெயர்மாற்றி, உடைமாற்றி, தமிழ், ஆங்கில மீடியம் என்று கணக்கு காட்டியதைக் கண்டுபிடிக்காத ஆய்வாளர்கள் குற்றவாளிகள் இல்லையா? கல்விதரும் தன் பொறுப்பிலிருந்து விலகி தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர்களை ஓடவைத்த அரசு குற்றமிழைக்க வில்லையா?
சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் சம்பந்தப்பட்டவர்களுக்கு குற்றப் பத்திரிக்கை கொடுக்காத காவல் துறை குற்றமிழைக்கவில்லையா? இப்படிப் பட்டியல்களை எத்தனை பக்கம் வேண்டுமானாலும் எழுத முடியும். ஆனால் சம்பவம் நடந்த உடன் அது உணர்வுபூர்வமாக மட்டுமே சித்தரிக்கப்பட்டது.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும், தீயே நீ என்று மாண்டுபோவாய்! என்ற வாசகங்களை சுமந்த பேனர்களும் கட்டப்பட்டன. அந்த உணர்ச்சிகரமான சூழல் முடிந்து சம்பவம் தொடர்பான விவாதங்கள் துவங்கும் போது பிரச்சினையை அன்றைய தமிழக அரசு மிக சாதுர்யமாக திசைதிருப்பியது. எரிந்ததற்கு கூரைதான் காரணம் எனவே தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கூரையை அகற்றுவது என்று முடிவு எடுத்து பரபரப்பு உண்டாக்கப்பட்டது. இந்த திசை திருப்பலை கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் மிக அழுத்தமாக பதிவு செய்கிறார்.
சரி கூரை எரிஞ்சதுன்னு தமிழ்நாடு முழுவதும் மாற்ற சொன்னீங்க, சென்னையில் ஸ்பென்சர் எரியவில்லையா? ஏழைகள் பள்ளினா உங்களுக்கு ஈஸியாபோச்சு, வழிச்சி எரிஞ்சிட்டிங்க. ஆனா நாற்பது வருடமா கூரையின் கீழ் வாழ்பவர்கள் இல்லையா? ஆஸ்பெட்டாஸ் சீட்டும், குறுகிய கட்டடமும் அதனால் உண்டாகிற வேர்வையும், இறுக்கமும் பிள்ளைங்க உடம்புக்கு எவ்வளவு பாதிப்பு தெரியுமா? போங்க சார்.. இது அரசாங்கத்தோட முட்டாள் தனத் துனால நடந்த கொலை என்று கோபம் கொப்பளிக்க மருத்துவர் ஜீவானந்தம் கேட்பதன் அர்த்தம் புரிகிறது.
அனைவருக்கும் கல்வி என்ற கோஷம் எப்படி படிப்படியாய் எப்படி ஆளும் அரசுகளால் கைவிடப்பட்டது. இன்றைய கல்வியின் அவலநிலை, எத்தகைய மாற்றை உருவாக்கலாம் என்ற ஆலோசனைகளுடன் கல்வியாளர்கள் பேசுகிறார்கள்.ஒரு சம்பவம் நடந்ததும் அது குறித்து பேசுவதும் சில தினங்களில் வேறோர் சம்பவம் நடந்ததும் முன்பு நடந்ததை மறப்பதும் நமது இயல்பாய் மாறிக் கொண்டிருக்கும் சூழலில்... கல்வி என்ற அமைப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டவர்களையும், கல்வி வியாபாரிகளையும் எதிர்த்து போராட வேண்டும் என்ற உணர்வை உருவாக்குவதில் என்று தணியும் தனது பங்க ளிப்பை செய்திருக்கிறது.உண்மைகளை அறிந்துக் கொள்ள மறுத்து, விலகிச் செல்வது சமூகத்தின் கொடூர குற்றங்களுக்கு துணை போவதாகும் உண்மைதான்...,உண்மைகளைத்தேடிச் செல்வோம்
இருப்பினும் சில கேள்விகளும் எழுகின்றன....சம்பவம் நடந்ததும் மாணவர் -இளைஞர் அமைப்புகள் நடத்திய போராட்டங்களை பதிவில் இணைக்காததும், இத்தகைய சம்பவத் திற்கு எதிர்வினையே இல்லை என்ற கருத்தாக் கமும், சரிதானா? கடந்த 30 ஆண்டுகளாய் கல்வியை, இந்திய அரசியல் சாசன சட்டத்தில் அடிப்படை உரிமை-யாக்க வேண்டும் என்று போராடி வருகிற..... கல்விநிலைய அடிப்படை பிரச்சனைகளுக்காக தடியடி, சிறை, வழக்குகளை சந்தித்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் பல வெற்றி களை பெற்றிருக்கிற அமைப்புகளின் குரல் பதிவாக வேண்டாமா?
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து உணர்ச்சி வேகத்தில் லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதாய் சொல்லி இன்றுவரை பணமே தராத நடிகர்களைப் பற்றி ஒரு வரி கூட விமர்சனம் இல்லையே ஏன்? வகுப்பறைக்குள் இன்றைய கற்பித்தல் முறையில் பாதிக்கப்பட்டுள்ள மாண வர்களின் குரல்கள் இல்லாததற்கு என்ன காரணம்?
------------------------------------------------------------- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark