மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

படுகொலை அரசியல்

Posted by நட்புடன் ரமேஷ் Saturday, March 8, 2008

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்த அரசியல் படுகொலைகள் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. திமுகவின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கே.கலைச்செல்வன், செங்கல்பட்டு அதிமுக நகரச் செயலாளர் செந்தில் ஆகியோர் கூலிப்படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்தப் படுகொலைகள் அரசியலில் ஆர்வம் கொண்ட அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதுவும், வெடிகுண்டைப் பயன்படுத்தி நடத்திய இந்தக் கொலைகள், வட இந்தியாவில் நடைபெறும் அரசியல் கொலைகளுக்கு நிகரானவை என பத்திரிக்கைகள் எழுதின.ஆனால், தொடர்ந்து சில அரசியல்வாதிகளுக்கும், ரவுடிகளுக்கும் உள்ள தொடர்பு பத்திரிக்கையாலும், காவல்துறையாலும், ஆட்சியாளர்களாலும் கண்டும் காணாமல் அனுமதிக்கப்பட்டது என்பது புறம்தள்ள முடியாத உண்மை.
சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் லீலாவதி (மார்க்சிஸ்ட்) படுகொலையும், சென்னையில் ஏழுமலை (மதிமுக) பரபரப்பாகப் பேசப்பட்டது. த.கிருஷ்ணன் (திமுக) படுகொலையும், ஆலடி அருணா (திமுக) படுகொலையும், சிவகங்கை நகர் மன்றத் தவைலர் படுகொலையும் எனத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் சமூக விரோதிகள் நடத்திய கோரத்தாண்டவத்தை யாரும் இன்னும் மறந்திருக்க முடியாது.அரசியலில் படுகொலைகள் தொடர அடிப்படையான காரணம், அரசியல் என்பது லாபம் கொழிக்கிற ஒரு துறையாக, பணம் புழங்கும் ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டதன் விளைவுதான்.
பணம் ஒன்றே பிரதானமாகிப் போன உலகமயச் சூழலில், பதவி வெறியும், குழு மனப்பான்மையும் மலினமானதன் விளைவு இது.அரசியல் என்பது சாக்கடை என்று இளம் தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் தவறான முதலாளித்துவ அரசியலின் உதாரணமாக லஞ்சமும், ஊழலும், பதவிச் சண்டையும், படுகொலைகளும் கண்முன்னே சாட்சியாய் நிற்கும் போது. அரசியலை விரும்பும் புதிய இளைஞர்கள் எப்படி களத்திற்கு வருவார்கள்.
ஆனால், தமிழகத்தின் அரசியல் தேவை, அரசியலின் எதிர்காலம் இளைஞர்களை நம்பித்தான் இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாது. எனவே, புனிதமான அரசியலின் நம்பிக்கை விதைகளை அவர்கள் மனதில் விதைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வன்முறை அரசியலுக்கு எதிராக நியாமான அரசியல் குறித்து, நேர்மையான அரசியல் அக்கரை கொண்ட அத்துனைபேரும் ஒன்று சேர்ந்து களமிறங்க வேண்டிய காலம் இது.
ஆயுதம் எடுத்துச் சாதிக்கலாம் என சிந்திப்பவர்களை ஒதுக்கித் தள்ளவேண்டிய கட்டாயம் நம் முன்னே உள்ளன.தமிழகத்தில் இருக்கிற அத்தனை அரசியல் கட்சிகளும், தங்கள் கட்சிகளில் உள்ள சமூக விரோதிகளை அடையாளம் கொண்டு ஒதுக்க வேண்டிய அவசியம் உள்ளது. காவல்துறையின் பூரண ஆசியோடு, அதிகார வர்க்கத்தின் துணையோடு கேட்பார் இல்லாமல் வலம் வரும் சமூக விரோதிகளை தங்களுக்குத் தேவையான போது பயன்படுத்திக் கொள்வதும், தேவையற்ற போது என்கவுன்டர் மூலம் சுட்டுத் தள்ளுவதும் தமிழகத்தில் வாடிக்கையாக மாறியுள்ளது.ஆனால், கொலைக்குக் கொலை என்ற அரசியலை புறம்தள்ளி, அரசியல் படுகொலைக்கு எதிராக மக்களைத் திரட்டி இயக்கம் நடத்தி நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அம்பலப்படுத்தி தண்டனைப் பெற்றுத் தருகிற இடதுசாரி இயக்கங்கள் நம்பிக்கை ஒளியாக திகழ்வதை இளம் தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டிய தேவை இருக்கிறது.
எந்தவொரு பிரச்சனைக்கும் ஆயுதமல்ல தீர்வு, மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே தீர்வாக முடியும் என்பது மதுரை லீலாவதி தொடங்கி திருப்பூர் ரத்தினசாமி வரை நிரூபிக்கப்பட்ட உண்மை.அரசியலில் வன்முறையை எதிர்ப்போம், வன்முறையை மக்கள் திரளால் முறியடிப்போம், அதிகார வர்க்கம், காவல்துறை, வன்முறையாளர் கூட்டை முறியடிக்க சபதமேற்போம்
---------------------------------------------------------------------------------டிசம்பர் 2007

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark