மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

மனு நீதி

Posted by நட்புடன் ரமேஷ் Friday, February 29, 2008


...ஆதலினால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்ன வென்றால் எத்துனை முறை முயற்சி செய்து முண்டியடித்தாலும், அதல, விதல, சுதல, தாராதல, இரசாதல, மகாதல, பாதாளம் என்ற கீழ் ஏழு உலகிலும், பூலோக, புகலோக, சுபலோக, சனலோக, தபோலோக, மகாலோக, சத்தியலோக என மேல் ஏழு உலகில் முறையிட்டாலும், நாட்டை ஆளும் எந்த அமைப்பின் மூலம் சட்டம் இயற்றினாலும், பாராளுமன்ற ஆட்சி என்று அறியப்பட்டாலும், பார்ப்பனீயத்தின் ஆட்சி அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது என்பதே...

27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றம் விதித்துள்ளத் தடை உத்தரவு கண்முன்னே சாட்சியாய் நிற்கும் போது, உச்சநீதிமன்றமா? உச்சிக் குடிமிமன்றமா? என்ற பெரியாரின் வார்த்தை நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது.

இருப்பினும் நீதிமன்றத்தை விமர்சனம் செய்வது நீதி பரிபாலனத்தை பாதிக்கும் என்பதாலும், பூலோகத்தில் அதர்மம் தழைக்க ஆதரித்ததாய் ஆகிவிடும் என்பதாலும், நீதி மன்றம் வாழ்கவென்றும், நீதிபதிகள் நீதிமான்களே என்றும் ஒப்புக் கொள்வோமாக.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால், வேலை நிறுத்தத்திற்கே தடை விதிக்கும் நமது நீதிமான்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பல நாட்கள் கலவரத்தில் ஈடுபட்டு, வேலை நிறுத்தம் செய்த இந்தியாவின் உழைக்காமல் விளையும் கழனியின் அதிபர்களுக்கு வேலை நிறுத்த நாட்களுக்கான சம்பளம் கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பு அளித்தது எந்த நீதியின் பொருட்டு என ஆராயத் தேவையில்லை.

தகுதியும், திறமையும் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் என்கின்ற உப்புச் சப்பில்லாத வாதத்தை முன்மொழிகிற இடமாய் நீதிமன்றம் மாறிப்போனதால் நீதிதேவதையின் கண்ணில் உள்ள கறுப்புத் துணிக்கு முழு அர்த்தத்தைப் புரியவைத்தற்காக நன்றி சொல்வோம் நீதிமான்களுக்கு.

இப்படி இருக்கும் வேலையில் தற்போது கல்வி நிலையங்களில் 27 சதம் இடஒதுக்கீட்டிற்கு தடை விதித்துள்ள நீதிமான்கள் எழுப்பும் கேள்வி நியாயமானது போல கஞ்சாவுக்கும், கதகதப்பு வியாபாரிகளுக்கும் வாழ்க்கை வரலாறு எழுதுகிற பத்திரிக்கைகளால் கருத்து உருவாக்கப்படுகிறது.

1931ஆம் ஆண்டு வெள்ளையர்கள் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்னர் இந்திய அரசு கணக்கெடுப்பு நடத்தவில்லை என்ற ஆகப்பெரும் வாதத்தை ஏற்றுத் தடை விதித்துள்ளனர். கணக்கெடுக்காமல் சிற்றறிவு படைத்த ஜென்மங்கள் கூட பெரும்பான்மையான ஜனத்திரள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதை ஒப்புக் கொள்ளும்

அவர்களுக்குரிய உரிமைகளை மறுபங்கீடு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை மறுக்காது, ஆனால், மிக நுற்பமான அறிவு படைத்த, மேதமை உள்ள நீதிமான்கள் இந்தச் சொத்தைக் காரணத்திற்காகத் தடை விதித்திருப்பது வியப்பை ஏற்படுத்தினால் அது உங்கள் குற்றம்.

குஜராத் நீதிமன்றத்திற்கு வெளியே மநுவின் சிலையை அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜனநாயக வாதிகள் ஒவ்வொரு நீதிமன்றத்திற்குள்ளும் மநு கோலோச்சுவதற்கு என்ன செய்வதாய் உத்தேசங் கொண்டுள்ளார்கள்.

ஒன்று சேர்வோம் - இடஒதுக்கீட்டைக் காப்போம் என்ற முழக்கத்தோடு ஏப்ரல் 14 அன்று தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்துகிற கருத்தரங்குகளில் கலந்து கொள்ள கோபம் கொண்ட ஜனநாயக வாதிகள் அழைக்கப்படுகிறார்கள்.புதைக்கப்பட்ட மநுவின் கல்லறை தாண்டி மீண்டும் அதன் கரங்கள் தேசம் தழுவத் துடிக்கிறது. பெரியாரும், அம்பேத்கரும், பி.சினிவாசராவும் விட்டுச்சென்ற ஆயுதம் எடுத்தே அதை அடக்கவேண்டியுள்ளது. எனவே, இதுகாறும் இதைப் படித்தவர்கள் இத்தலைவர்களின் அடியற்றி சமூக நீதி காக்க அழைக்கப்படுகிறார்கள். நன்றி.

-----------------------------------------------------------------------------------ஏப்ரல் 2007

1 Responses to மனு நீதி

  1. ஏப்.14 அன்று தமிழகம் முழுவதும் வாலிபர் சங்கம் நடத்துகிற கருத்தரங்கில் கலந்து கொள்ள என்ற வாசகத்தை எடுத்து விடவும்

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark