மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

கட்டாத பாலத்திற்கு கட்டிய கதை

Posted by நட்புடன் ரமேஷ் Tuesday, February 26, 2008




1 860 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே பேசப்பட்டு, தமிழக மக்களிள் நீண்டநாள் கோரிக்கையான சேதுசமுத்திர திட்ட அமுலாக்கம் பல ஆண்டுகள் கழிந்து இப்போதுதான் வடிவத்திற்கு வந்துள்ளது. ராமேஸ்வரம் - இலங்கை இடையிலான கடல்பகுதியில் கப்பல் செல்வதற்கு வசதியாக 2400 கோடி ரூபாயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

சேதுசமுத்திர திட்டம் துவங்கியபோது சுற்றுசூழல் குறித்து எழுப்பப்பட்ட வினாக்கள் ஒரு நல்ல விவாதமாய் இருந்தது மட்டுமல்ல, மக்களுக்கு பயன் உள்ளதும்கூட.

ஆனால் 17.5 லட்சம் வருடங்களூக்கு முன்பு இராமன் கட்டியப் பாலம் அங்கு உள்ளது என்றும், அதை இடிக்க கூடாது என்றும் இந்துத்துவ சக்திகள் கதையளப்பதும், அதை ஏற்று நீதிமன்றம் தடை உத்தரவு வழங்குவதும் நீதிமன்றத்தின் மீது மரியாதையை கேள்விக்குள்ளாக்கும் செயலாகும்.
சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்னரே நவீன மனிதன் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளான். இந்திய-இலங்கை பகுதியில் சுமார் 50,000 வருடங்களுக்கு முன்னர்தான் நவீன மனிதப்பரவல் நடந்துள்ளது.
எனவே 17.5 லட்சம் ஆண்டுக்கு முன் ராமன் வாழ்ந்ததும் பாலம் கட்டியதும் சங்பரிவார் அமைப்புகளின் வழக்கமான கடைந்தெடுத்த கட்டுக் கதையாகும். இந்தப்புரட்டு வேலை இவர்களுக்கு புதிதல்ல.

பிள்ளையார் பால் குடிப்பதாக கிளப்பி விடுவதும், கற்சிலையில் தாலிக்கயிறு விழுந்தால் நாட்டில் உள்ள பெண்களின் தாலிக்கு ஆபத்து என்று மிரட்டுவதும், பாபர் மசூதியை திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம் ராமர் கோயில் பிரச்சனையாக திருட்டுத்தனமான ஆதாரங்கள் மூலம் மாற்றியதும், ஹரப்பன் எருது சின்னத்தை குதிரை சின்னமாக கணிணி மூலம் மாற்றி ஆரிய நாகரீகம் என்று நிருபிக்க, சித்துவேலை புரிந்து, உலக அறிஞர்கள் மத்தியில் கேவலப்பட்ட கூட்டம்தான் இது.

எப்போதுமே ஆதாரங்களை அறிவியல் உண்மைகளை நம்பிக்கைக் கொள்ளாமல் மூடநம்பிக்கையின் மேல் பிரச்சினைகளை கட்டியெழுப்புகிற கூட்டம் இது.

பாக் நீரிணையில் ஆதம் பாலம் என்ற இயற்கையாக எழுந்த மணல்திட்டை ராமர்பாலம் என்று கதையடிப்பதும், அதற்காக ஊர் ஊராக மாநாடு நடத்துவதும் மலிவான விளம்பர யுக்திகளே! மதநம்பிக்கை அடிப்படையில் சர்வதேச அரசியல் புளுகர் சுப்பிரமணியன்சாமி நீதிமன்றத்தில் வாதாடி ராமர்பாலம் இடிக்க தடைப் பெற்றுள்ளார். நமது கவலை நீதிமன்றம் எந்தவித அறிவியல் பார்வையும் இல்லாமல் இப்படி தீர்ப்பு வழங்குவது பற்றிதான்.

சமீபத்தில் ராமகோபாலன் தமிழக அரசு கோயில் நிலங்களை கைவைப்பதும், நிலமற்றோர்களுக்கு பிரித்துக்கொடுப்பது இந்துமத உணர்வை புண்படுத்தும் என்றார். தரிசாய் கிடந்தாலும், ஆதிக்க சாதியினர் பிடியில் இருந்தாலும் இருக்கலாம் ஆனால் தலித் மக்களுக்கு நிலங்கள் போகக்கூடாது என்ற வக்ரபுத்தியின் வெளிப்பாடுதான் இது.

ஆக மத நம்பிக்கை அடிப்படை என்று இவர்கள் எதையும் சொல்லத் துணிந்தால் என்னாவது.இடஒதுக்கீட்டில் மிகச்சரியான காரணங்கள் இல்லாமல் நமது நீதிமன்றம் கொடுத்த தடை தீர்ப்பும், சமீபத்தில் கொலை வழக்கில் கைதான, கொலைக்குக் காரணமான நபர் என்று குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியின் வழக்கில், சுவாமிகள் மீது பக்தி கொண்ட நான் இவ்வழக்கில் நீதிபதியாய் இருக்கமாட்டேன் ஒரு நீதிபதி வழக்கை வேறு ஒரு நீதிபதிக்கு மாற்றுவதும், இப்போது ராமர்பாலம் என்ற அறிவியல் ஆதாரமற்ற கட்டுக்கதைக்கு செவிமடுத்து ஒரு வளர்ச்சிப் பணியில் தேக்கத்தை ஏற்படும் விதத்தில் தீர்ப்பளிப்பதும் முறையானதா என்பதை நீதிபதிகள்தான் முடிவெடுக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டின் ஜனநாயகம் குறித்த நம்பிக்கையின் இறுதி புகலிடமாக இருக்க வேண்டிய நீதிமன்றங்கள் ஊழல் என்ற சாக்கடை கலக்கும் இடமாக மாறிவருவதும். தீர்ப்புக்கு லஞ்சம் பெறும் கீழ்த்தரமான நடைமுறை பெருகிவருவதும் சாதாரன மக்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகிற சூழலில், மத நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பும், பக்தி அடிப்படையில் பொறுப்பிலிருந்து விலகுவதும், ஜனநாயகம் குறித்து அவநம்பிக்கை உருவாக்கும்.

என்ன செய்யலாம்! நீதிமன்றங்கள் மட்டுமல்ல மக்களும் முடிவு செய்ய வேண்டிய நேரமிது.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark