மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

மகாத்மா காந்தியை மட்டுமே "மகாத்மா" என நினைவு தெரிந்த பருவம் முதல் கேள்விப்பட்டு, படித்து வளர்ந்தவர்களுக்கு இப்புத்தகத்தின் தலைப்பு மிகவும் வியப்பை அளிக்கும்.. பதினாறு ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் ஊழியனாய் பணியாற்றிக்கொண்டிருந்த எனக்கு ஒரு தோழர் இப்புத்தகத்தை கொடுத்தார். இதற்கு முன் ஒரு புத்தகத்தை படித்து அதன் பாதிப்பால் இருக்கும் இடம் மறந்து கண்ணீர்விட வாய்ப்பிருக்கிறது என்று யாராவது சொல்லியிருந்தால் சிரித்திருப்பேன்.. ஆனால் அதுதான் நடந்தது. ஒருவேலை வயது காரணமாய் உணர்ச்சிவயப்பட்டு இருக்கலாம் என்றால்.... இப்போது படித்தபோதும் அப்படியே நிகழ்ந்தது. ஒரு மூத்த தோழரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னார் "இப்புத்தகத்தை படிக்கும் எந்த ஒரு மனிதனும் இதன் பாதிப்பிலிருந்து மீளமுடியாது."

சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் நடந்துக்கொண்டிருக்கும் நிலப்போராட்டத்தின் மீது காங்கிரஸ் அரசு நடத்திய துப்பாக்கிச்சூடு நமது நாட்டையே உலுக்கியது. எட்டு போராளிகளின் உயிரைக்குடித்த அந்த சம்பவத்திற்கு பிறகு இந்திய ஜனநாயக வாலிபர்சங்க மத்திய நிர்வாகக் குழுவின் சார்பில் அங்கு சென்று வந்த தோழர் கண்ணன் அவர் பார்த்த, கேட்ட விஷயங்களை எங்களோடு பகிர்ந்துக்கொண்டார். "ரத்தத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சியில் மயங்கிவிழும் சினிமா கதாநாயகிகள் அல்லது மேல்தட்டு பெண்கள் என காங்கிரஸ் அரசு நினைத்திருக்கும். இவர்கள் வீரத் தெலுங்கானாவின் வாரிசுகள் என்பது போராட்டக்காரர்களுக்கு மட்டுமே தெரியாது. தடியடி, அனுமதி மறுப்பு, சிறையில் அடைப்பு என அடக்குமுறையை கையாண்ட ஆந்திர அரசு, இறுதியில் சுட்டுக் கொலை செய்யும் மிருக குணத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் போராட்டம் பீனிக்ஸ் பறவையைப் போல், பல லட்சம் மக்களை ஆர்ப்பரிக்கச் செய்துள்ளது" என அவர் சொன்னபோது வியப்பாய், உற்சாகமாய், ஆச்சரியமாய் இருந்தது. இறந்துப்போன குடும்பங்களில் உள்ளவர்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டு முடங்கிக்கிடக்கவில்லை, போராட்டத்திற்கு அழைத்த இயக்கத்தின் மீது வசைமாரி பொழியவில்லை, சோகங்களை துடைத்து எரிந்துவிட்டு அடுத்தகட்ட நிலப்போராட்டத்திற்கு தயாராக இருந்தனர். தொடர்ந்து நடத்தியும் வருகின்றனர். இது எப்படி சாத்தியமாயிற்று.

அப்படியெனில் அந்த மண்ணின் சாரத்தை தெரிந்துக்கொள்ள வேண்டாமா? ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பல லட்சம் மக்களுக்கு பிரித்துக்கொடுத்த வீரத்தெலுங்கானா மண்ணல்லவா அது. வெறும் ஆயுதம் தாங்கிய போராளிகளால் மட்டுமா அது சாத்தியமானது! அந்த போராளிகளுக்கு உறைவிடம் கொடுத்து, உறவாய், பாதுகாப்பாய் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இல்லாமல் இது சாத்தியமா?

தெலுங்கானா போராளிகளுக்கு ஆதரவாய் நின்ற அம்மக்கள் எத்துனை மகத்தானவர்கள். தன்னுடைய உடைமைகளை இழந்து, காலமெல்லாம் உழைத்து சேமித்து வைத்த சிறு சொத்துக்களை இழந்து, தனது மானம் இழந்து இந்திய ராணுவத்தால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் ஊர்வலமாய் அழைத்துச் செல்லப்பட்ட போதுகூட தனது "தோழர்கள்" எங்கே என வாய் திறக்காத அந்த லட்சிய பிடிப்பு எத்துணை மகோன்னதமானது. சலவை தொழில் புரியும், கல்வி அறிவு இல்லாத லச்சம்மாவின் காவியத்தை படித்துவிட்டு சொல்லுங்கள் மகாத்மா யார் என்று அல்லது கல்வி அறிவு மட்டும் இதை சாதிக்க முடியுமா என்று? லச்சம்மா மட்டுமல்ல ஜெயினாப் பீ, மல்லிகாம்பா, மங்கிலி, ராம் பாயம்மா, அயிலம்மா, சிவம்மா, என பட்டியலிடப்பட்ட சிலரும் பட்டியலில் அடங்காத அல்லது அடக்க முடியாத ஆயிரக்கணக்கான மனிதர்களும் இமயமென உயர்ந்து நிற்கின்றனர். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இவர்கள் ஆயுதம் தரித்து போர்க்களத்தில் நின்றவர்கள் இல்லை.. அந்த களப் போராளிகள் வீரத்திற்கும், தியாகத்திற்கும் ரத்தமாய், உயிர் மூச்சாய் நின்றவர்கள்.

ஹைதராபாத் நிஜாமின் யதேச்சாதிகாரத்தையும், நிலஉடைமை வர்கத்தின் மூர்க்கத்தனமான சுரண்டலையும் எதிர்த்து நடைபெற்ற வீரம் செரிந்த இயக்கமான தெலுங்கானா போராட்டத்தில், நளகொண்டா, வாராங்கல், கம்மம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 3000 கிராமங்களை சேர்ந்த 30 லட்சம் மக்கள் போராட்டக்குழுக்களின் ஆளுகைக்குள் வந்தனர். அனைத்து கிராமங்களிலும் போராடும் பஞ்சாயத்துக்களை கொண்ட கிராம ராஜ்யம் இப்பகுதிகளில் நிறுவப்பட்டது. 10 லட்சம் ஏக்கர் மக்களுக்கு சொந்தமாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பு நிஜாம் கூலிப்படைகளால் சொல்லொண்ணா கொடுமைகளுக்குள்ளான தெலுங்கானா போராளி மக்கள், 1947ல் நமது நாடு சுதந்திரம் அடைந்த போது மகிழ்ந்தனர். அகிம்சையை போதித்த காங்கிரஸ் அரசு தங்களிடம் அன்பாய் நடந்துகொள்ளும் என நம்பினார்கள். சுதந்திரத்துக்கு முன் "இந்தியர்கள் சுயமரியாதையாக வாழ சுதந்திரம் வேண்டும்" என கோஷம் எழுப்பியது காங்கிரஸ். அதனால் சுதந்திரத்துற்குப் பின் தங்கள் நியாயமான, வாழ்வாதார கோரிக்கையான, சுதந்திரத்துக்கான அர்த்தம் என சொல்லப்பட்ட சுயமரியாதைக்கு அடிப்படையான நிலம் தங்களிடமே தங்கும் என நம்பினர்.

ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நிஜாம் ஆட்சியின் கைக்கூலிகளைவிட கொடூரமாய் நமது தேசிய ராணுவம் அப்பாவி மக்களை சூறையாடியதும். கேவலமான பிணந்தின்னிகளாக நமது சகோதரிகளின் சதைகளை கொத்தித் தின்றதும். காலம் குறித்துவைத்த ரணசாட்சியாய் வரலாற்றில் உறைந்துள்ளது.

தெலுங்கானா போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு அந்த போராட்ட களங்களுக்கு சென்று, ஆயுதந் தாங்கிய விவசாயப் போராளிகளை ஆதரித்த ஒருசில தியாகக் குடும்பங்களின் வரலாற்றினை இந்த புத்தகத்தில் சந்திக்கும் நிகழ்வுகளில் அறிவீர்கள். இப்புத்தகம் மீண்டும் வெளிவரும் நேரமும், சுழல் மிகவும் பொருத்தமானது. இன்றைய அரசியல் சூழலின் பிண்ணனியி இப்புத்தகத்தை வாசிப்பது அவசியம்.

ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மூன்றாம் உலக நாடுகளை விழுங்க துடிப்பது எதிர்பாராத நிகழ்வல்ல.. லாபம், லாபம், லாபம் ஒன்றே அதன் எல்லாமும். அது விரும்பும் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும். அதற்காக எந்த நாட்டின் சட்டங்களும் வளைக்கப்படும். எதிர்க்கு அரசுகள் துக்கிலடப்படும். உலகம் முழுமைக்கும் ஒரே சந்தை. திறமை இருப்பவர்கள் முன்னேறலாம் என்பதை, ஆமாம் ஆமாம் என ஆமோதிக்கின்றனர் நமது ஆட்சியாளர்கள். லாபம் ஒன்றே நோக்கம் என்று அறிவிக்கப்பட்ட பின்பு அதில் நேர்மை, அன்பு, கருணை, மனிதநேயம், மக்கள் நலம் என்பதெல்லாம் நகைப்புக்குறியதாய் மாறிவிட்டது. பண்ணாட்டு நிறுவனங்களுக்கு ஆளும் அரசுகளே ஊதுகுழலாய் மாறிய பின்பு, நமது ஊடகங்கள் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம் காட்டுவது தவிர்க்க முடியாது. "உலகமயம் தவிர்க்க முடியாதது.. இது ஒன்றே நாட்டை முன்னேற்றும்" என தினம் தினம் மண்டைக்குள் அறைந்து ஏற்றப்படும் செய்தி இதுதான். எப்படி பட்ட சந்தையில் நமது நாடு போட்டி போடுகிறது என்பது கூட மக்களுக்கு தெரியாது.

றமது நாட்டில் உள்ள 27 அரசுத் துறை வங்கிகளின் மொத்த ஆரம்ப மூலதனம் 3 மில்லியன் (12,500 கோடி). ஆனால் அமெரிகாவின் சிட்டி பேங்க் என்ற ஒரு வங்கியின் ஆரம்ப மூலதனம் 62 மில்லியன் (2,48,000 கோடி). ஜப்பானின் ஹாங்காங் சாங்காய் வங்கியின் மூலதன மதிப்பு 54 மில்லியன் (2,16,000 கோடி). இதில் யாரை யார் விழுங்குவார்கள் எந்பதர்க்கு விளக்கம் தேவையில்லை. சரி நமது நாட்டில் நம்மை கடந்து சென்ற சில நிகழ்வுகளை பார்ப்போம்.

- சென்செக்ஸ் புள்ளி 1000ஐ எட்டிவிட்டால் நமது நாளிதழ்களும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் அந்த செய்தியை கொண்டாட்டமாக அறிவிக்கின்றார்கள். நூறுகோடி இந்தியர்கள் வாழ்வில் மாற்றம் வரப்போவதாய் நம்பவைக்கப்படுகிறது.

- லட்சுமிமிட்டல் 3 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் என்ற செய்தி, இந்தியாவே பெறுமையில் பொங்கி வழிவது போல் சித்தரிக்கப்படுகிறது.
- ரிலையன்ஸ் அம்பானி ஹட்ச் போனை கப்பற்றும் 75 ஆயிரம் கோடி போட்டியில் நின்றால் அவரது "திறமை" வெகுவாக புகழப்படுகிறது. அம்பானி "உழைத்து முன்னேறிய கதை" பலமொழிகளில் புத்தகமாய் வந்து பரபரப்பாகிறது.
- கோரஸ் இரும்பு ஆலையை டாடா 55 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கும் போது, கடன் தேவை என்றால் அரசு உதவும் என தானே முன்வந்து நிதியமைச்சர் அறிவிக்கிறார். ஏனெனில் இது இந்தியர்களின் வெற்றி என அறிவிப்பு செய்கிறார்.
- 1,25,000 கோடி முதலீட்டில் சிரப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்படுவதால் இந்தியா வல்லரசு பாதையை நோக்கி அசுரகதியில் வளரும் என மார்தட்டப்ப்படுகிறது. மொத்தத்தில் உலகமய போட்டியால் நமது நாடு முன்னேறுகிறது என்று ஒட்டு மொத்த ஊடகங்களும் மக்களை நம்மவைக்க போட்டிப் போட்டுக்கொண்டு பணியாற்றுகின்றன. ஆனால்...
- சென்செக்ஸ் 1000 புள்ளியை தொட்ட அதே தினத்தில் நமது தேச தலைநகரில் கடும் குளிரில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல், நடைபாதையில் இறந்துப்போன ஏதோ ஐந்துபேரைப் பற்றி பெட்டிச் செய்தி கடைசிப்பக்கத்தில் ஊடகங்கள் வெளியிடுகின்றன.
- லட்சுமிமிட்டலின் புகழ்பாடும் அதேவேலையில் மன்மோகன் ஆட்சியில் மூன்றாண்டுகளில் 1100 நிறுவனங்களில் உள்ள பங்குதாரர்கள் ஒரு பைசாகூட வட்டி செலுத்தாமல் 40 ஆயிறம் கோடியை சுருட்டிக்கொண்டது யாருக்கும் தெரியாது.
- ரிலையன்ஸ் அம்மானியின் புகழ் பாடுபவர்கள் நமது தொலைதொடர்பு துறையை 45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் போன் ஏமாற்றியதை சொல்ல மறுக்கின்ரனர். நிதி அமைச்சர் சிவகங்கை சீமான் சிதம்பரம் கொள்ளையடித்த அம்பானியிடம் செல்லமாய் கோபித்து 500 கோடி கட்டினால் போதும் என கெஞ்சுகிறார்.
- தொழில் துறையில் முன்னேறுவதாக பிரச்சாரம் செய்பவர்கள், அங்கு ஏற்படும் வேலையிழப்பை பார்க்க மறுக்கின்றனர். உதாரணமாக ஜம் ஷெட்பூரில் உள்ள டாடா எக்கு ஆலை 1991 - 2005 காலகட்டத்தில் தனது உற்பத்தியை ஐந்து மடங்கு உயர்த்தி உள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் அங்கு பணியாற்றிய தொழிளாலர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்திலிருந்து 44 ஆயிரமாக குறைந்துள்ளது. அதாவது சரிபாதி.
- சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு 1,25,000 கோடி ஒதுக்க தயாராகும் அரசு, அங்கு நிலங்களை இழந்த மக்களுக்கு எந்த வாழ்வாதாரத்தியிம் காட்ட மறுக்கிறது. டாடாவுக்கு தானாய் முன்வந்து கடன் கொடுக்க தயாராய் உள்ள மத்திய அரசு இந்த அக்கரையில் கொஞ்சம் காட்டி நமது விவசாயிகள் கடன் சுமையை பகிர்ந்துக்கொண்டிருக்கும் என்று சொன்னால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருலட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
நமது வங்கிகள் யாருக்கானது, சாதாரண மக்களுக்கு அவர்கள் பணத்திற்க்காக அளிக்கும் வட்டி விகிதம் 3.5 சதம் அல்லது 7சதம். ஆனால் பெரும் முதளாலிகளுக்கு 12 சதம். கடன் கொடுப்பதிலும் பாராபட்சம் உள்ளது. ஏழை மக்களுக்கு கொடுக்கும் விவசாய கடன்களுக்கு 9 சதம் வட்டி. கல்வி கடன்களுக்கு 14 சதம். ஆனால் பெரும் முதளாலிகளுக்கு வெரும் 7 சதம்தான். இந்த பின்னனையில்..
75 சதம் மக்க விவசாயத்தை நம்பி வாழும் நமது நாட்டில் விவசாயம் சீரழிக்கப்படுகிறது. 1950ல் ஆண்டொண்றுக்கு 184 நாளாக இருந்த கிராமப்புற விவசாய கூலித்தொழிளாலர்களின் வேலை நாட்கள் 1964ல் 217ஆக உயர்ந்து பின் 180ஆக மாறி, 1990ல் 100 நாட்களாகவும், 2000ல் 80 நாளாகி தற்போது 60 - 70 என சுருங்கி உள்ளது. 70 முதல் 75 சதம் வரை விவசாயம் உள்ள நமது நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் இத்துறையின் வளர்சி வெறும் 2 சதமே. தமிழகத்தின் மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 1961ல் 43.51 சதமாக இருந்தது. இது 2005ல் 15.97 சதமாக குறைந்தது. இன்னும் தீவிரமாக இந்தபாதிப்பை அறிய வரும் விபரம் உதவும்; 1998ல் 94 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தி 2005ல் 44 லட்சம் டன்னாக குறைந்தது.
முதல் ஐந்தாண்டு திட்டத்தின் போது தேசிய மொத்த உற்பத்தில் 14.9 சதம் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்டது. 10 வது ஐந்தாண்டு திட்டத்தில் இதுவே 5. சதமாக குறைந்தது. இந்த பாதிப்புகளினால் அதிகம் பாதிக்கப்படுவது தலித் மக்கள்தான் தமிழகத்தில் 19.18 சதம் தலித் மக்கள் 1985ல் 12 சதம் சாகுபடி செய்தனர், 1991ல் 7 சதம் மட்டுமெ செய்தனர். தற்ப்போது அது இன்னும் குறைந்துள்ளது. இதன் நேரடி விளைவு கிராமப்புரங்களிலிருந்து மக்கள் இடம் பெயர்வதும், நகர்புரங்களில் ஏற்படும் நெருக்கடியும்.. இன்னும் பிறவும்.

ஆனால் இப்பிரச்சினைகள் மற்றொரு வகையில் மக்களை போராட தூண்டியுள்ளது. சமீபத்தில் ஆந்திரத்திலும், தமிழகத்திலிம் நடந்த நிலத்திற்கான போராட்டம்தான் அது. ஆயிரக்கனக்கான மக்கள் திரண்ட இப்போராட்டங்கள் உலகமய சூழலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி அல்லவா? தமிழகத்தில் உள்ள 62 லச்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் தரிசு நிலங்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்க போராடவேண்டிய காலம் இது. உழைப்பாளி மக்களுக்கு ஆதரவாய் களமிறங்கிப் போராடும் ஊழியர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது, ஏகாதிபத்திய உலகமயமாக்கல் பண்பாட்டுத் தளத்தில் செய்துவரும் வேலை சாதாரனமானது அல்ல.

மொத்த ஊடகங்களையும் தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு உழைப்பாளி மக்களை சுரண்ட அவர்களிடமே அது ஒப்புதல் பெருகிறது. இதை உடைக்க வேண்டுமெனில் மக்கள் இயக்க ஊழியர்கள் தங்கள் அளவில் அளவில்லா நம்பிக்கையுடன் போராட வேண்டியுள்ளது, அத்தகைய போராளிகளுக்கானது இந்த புத்தகம். களப்போராட்டத்தின் மீது நம்பிக்கையும், உழைப்பாளி மக்கள் மீது அன்பையும் இப்புத்தகம் ஏற்படுத்தும்.

இந்த பிண்ணனியுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுசெல்லப்பட வேண்டிய ஒரு நூல் இது. புறம் தள்ளப்பட்ட மக்கள் முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை வைத்து அரசியல் இயக்கங்களுக்கு வரும் இளம் தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. ஏனெனில் தனது தலைமுறையில் அவநம்பிக்கைகளை மட்டுமே அதிகம் எதிர்க்கொள்ளும் சூழல் உள்ள, தான் என்ற சுயம் மட்டுமே முக்கியம்,அடுத்தவர் பற்றி கவலைக் கொள்வது முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை என போதிக்கப் படுபவர்கள். இத்தகைய இளைஞர்களுக்கு மக்கள் போராட்டம் எத்தகைய சக்திவாய்ந்தது என்று கற்றுத்தர வேண்டிய அவசியம் உள்ளதால் இப்புத்தகம் முக்கியத்துவம் பெருகிறது. 1953ல் தெலுங்கில் வெளியான இந்த புத்தகம், 1987ல் சென்னை புக்ஸ் தமிழில் மகாத்மாக்கள் என்ற மிகச்சரியான தலைப்பில் வெளியிட்டது. இப்போது இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. பிரங்ஞை பூர்வமாய் தமிழக இடதுசாரி சக்திகளுக்கு உதவி வருகிற, எத்துணை சிரமம் இருப்பினும் ஒரு கோபம் அல்லது சிரிப்பு இத்தோடு அந்த சிரமத்தை கடந்துவிட்டு, மீண்டும் உற்சாகமாய் அடுத்த புத்தக இயக்கத்திற்கு தயாராகிவிடும், இப்பணியை தனது வாழ்க்கையோடு இணைந்த அரசியல் கடமையாய் கொண்டுள்ள தோழர் பாலாஜிக்கு நன்றி.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark